25/10/2025
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS): உண்மைகளும், பரப்புரைகளும்
ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக வாழ விரும்பும் பலருக்கும், மிகவும் நம்பகமான முதலீட்டு வாகனமாக தேசிய ஓய்வூதியத் திட்டம் திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளில், இது வடிவத்திலும், நெகிழ்வுத்தன்மையிலும் பெரிதும் மேம்பட்டுள்ளது. அதே சமயம், அதிலுள்ள சில கட்டுப்பாடுகள் இன்றும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப் படுகின்றன — அதில், சில நியாயமானவை, சில மிகைப்படுத்தப்பட்டவை. இந்த ஆசிரியர் குறிப்பு பகுதியில், திரு.திரேந்திர குமார் அவர்கள் NPS மீது உருவாகி வரும் எதிர்மறையான விமர்சனங்களை ஆராய்ந்து, முதலீட்டாளர்கள் அவற்றை உண்மையில் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என விளக்குகிறார்.
NPS ஒரு எதிர்மறையான முதலீடா?
சமூக ஊடகங்களில், குறிப்பாக சமூக நிதி வலைத்தளங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் இடையே ஒரு ஆச்சர்யமான போக்கு உருவாகியுள்ளது. பல நிதி ஆலோசகர்கள் மற்றும் ‘பின்ஃப்ளூயன்சர்கள்’, இவர்களில் சிலர் மிகவும் பிரபலமானவர்கள், NPSக்கு எதிராக மிக வலுவான பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். அவர்களின் பதிவுகள், ஆயிரக்கணக்கான பகிர்வுகளையும், வீடியோக்கள் மிகுந்த பார்வையாளர்களையும் பெறுகின்றன. அந்தப் பதிவுகளின் வாசகர் கருத்துப் பிரிவில், பலரும் தாங்கள் தவறு செய்துவிட்டோமோ எனக் கவலைப்படுகிறார்கள்.
NPSக்கு எதிரான வாதங்கள் மிகவும் பரிச்சயமான போக்குகளை பின்பற்றுகின்றன.
- முதலீட்டைத் திரும்பப் பெறும் கட்டுப்பாடுகள் குறித்து குறை கூறுதல்.
- கட்டாயமான Annuity முதலீடு குறித்து புகார் கூறுதல்.
- தவறவிடும் வாய்ப்புகள் (opportunity cost) குறித்து, திறமையான கணக்கீடுகள் மூலம் ஒப்பீடு செய்தல்.
- அதனால் முதலீட்டை மொத்தமாக தவிர்க்க வேண்டுமென பரிந்துரைத்தல்.
சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஒருவரது சேமிப்புத் தொகை குறைவாக இருந்தால் NPSயை விட்டு வெளியேறச் சொல்கின்றனர்.
இந்த பிரச்சாரங்களைப் பற்றி மிகுந்த ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்: அது நுட்பமான பல விசயங்களில் சரியாக இருந்தாலும், ஓய்வூதிய முதலீட்டின் அடிப்படை நோக்கத்தை தவறாகப் பார்ப்பதுதான். விமர்சகர்கள், முதலீடுகளின் வருமான விகிதத்தை, மிகச்சிறிய புள்ளிகள் அளவுக்கு துல்லியமாக அதிகப்படுத்துவதில்மட்டுமே கவனத்தைச் செலுத்தி, முதலீட்டின் அடிப்படை நோக்கத்தைப் பார்க்காமல் கோட்டை விடுவதுதான்.
இங்கு மனிதர்களின் மேம்போக்கான நடத்தை குறித்து ஒரு எளிய உண்மையை ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்வோம்:
யாராவது ஒருவர் ஒரு முதலீடோ அல்லது ஒரு வியாபாரமோ, நன்றாகவும், செய்யத் தக்கதாகவும் இருக்கிறது என்று சொன்னால், நாம் ‘அப்படியா, சரி, நல்லது’ என்று சொல்லி எளிமையாக கடந்து சென்று விடுகிறோம். ஆனால் யாராவது “நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள்” என்று சில கணக்கீடுகளைக் காட்டி எச்சரித்தால், அந்தப் பதிவை நாம், நண்பர்களுடன் தவறாமல் பகிர்கிறோம். எதிர்மறையான செய்திகள் மிக அதிகமான ஈர்ப்பை இயல்பாகவே உருவாக்குகிறது; அந்த ஈர்ப்பு சமூக ஊடகங்களில் பணமாக மாறுகிறது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் NPS குறித்து வரும் அனைத்து விமர்சனங்களும் பொய் எனக் கூறுவது அல்ல. NPSல் சில நியாயமான குறைபாடுகள் உள்ளன. அவை விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
- கட்டாய Annuity முதலீடு, திட்டத்தின் நெகிழ்வுத் தன்மையை குறைக்கிறது.
- முதலீட்டிலிருந்து வெளியேற விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் சிலருக்கு சிரமம் தருகின்றன.
- நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், பரஸ்பர நிதி முதலீடுகளும், நேரிடையான பங்குச் சந்தை முதலீடுகளும் அதிக வருமானத்தை தரக் கூடியவை.
இவை அனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டிய நியாயமான விமர்சனங்கள். இவற்றுள் கட்டாய Annuity முதலீட்டு விதியை மீளாய்வு செய்யும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
# # # ஓய்வூதிய முதலீட்டின் உண்மை நோக்கம்
விமர்சகர்கள் பெரும்பாலும் மறந்துவிடுவது இதைத்தான்: ஓய்வூதிய முதலீட்டின் நோக்கம் அதிகபட்ச வருமானத்தை ஈட்டுவது அல்ல. மாறாக 30-40 ஆண்டுகள் எந்த இடைவெளியுமின்றி தொடர்ச்சியாக பின்பற்றக் கூடிய ஒரு திட்டத்தை உருவாக்குவதே.
ஓய்வூதியத் திட்டத்தின் வருமான விகிதத்தை அதிகரிக்க முயலும் ஒருவருடைய வழக்கமான பயணத்தைப் பார்ப்போம்:
அவர் ஒரு சில பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடுகளில் தனது முதலீட்டைத் தொடங்குகிறார். பின்பு நேரடி பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்கள் சிறந்தவை என அறிகிறார் → அவற்றுக்கு தனது முதலீட்டை மாற்றுகிறார் → பின்பு சிறுநிறுவன பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்கள் அதிக வருமானம் தரும் என அறிகிறார் → மீண்டும் தனது முதலீட்டை மாற்றுகிறார் → பின்பு அமெரிக்கச் சந்தைகள் இந்தியச் சந்தையைவிட அதிக வருமானம் தருவதாக அறிகிறார் → மீண்டும் மாறுகிறார்.
இந்தப் பயணத்தின் மூலம் அவர் இழக்கும், வெளியேற்றுக் கட்டணங்களையும் வரிச் சுமைகளையும் அவர் உணர்வதுமில்லை, ஒரு முதலீட்டுத் திட்டம் வேலை செய்யத் தேவையான காலத்தை அவரால் அளிக்க முடிவதுமில்லை.
NPS இதுபோன்ற உணர்வுபூர்வமான முடிவுகளையும், தேவையில்லாத திட்ட மாறுதல்களையும் தவிர்க்க உதவுகிறது. சம்பளத்திலிருந்து தானாகவே பணம் கழிக்கப்படுகிறது, பல வகையான சொத்துகளில் தானாகவே முதலீடு செய்யப்படுகிறது, ஓய்வுபெறும் வரை பணம் பூட்டப்பட்டே இருக்கிறது. இந்த திட்டம் கவர்ச்சிகரமானாதோ அல்லது சுவாரசியம் மிக்கதானதோ கிடையாது. மேலும் நீங்கள் நினைக்கும்போதெல்லாம் திட்டத்தை மாற்றிக்கொண்டே இருக்க வழிவகையும் கிடையாது. இவைகளெல்லாம் குறைகள் போலத் தோன்றலாம் — ஆனால் அதுவே அதன் பலம்.
# # # உண்மையில் NPS என்ன சாதிக்கிறது.
பலர் கவனிக்க மறந்த முக்கியமான விஷயம் என்னவெனில் — பெரும்பாலான ஓய்வூதிய முதலீட்டாளர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய அபாயம், அனுகூலமான முதலீட்டு வருமானத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு சதவீதம் குறைவாக கிடைக்கும் வருமானம் அல்ல, இதைக்கூட காலம் சென்றபிறகே ஒருவரால் உணர முடியும். ஆனால் உண்மையான ஆபத்து என்பது, ஆரம்பத்திலிருந்தே போதுமான அளவு சேமிக்காததே, அல்லது அவசரச் செலவுகளுக்காக அந்தப் பணத்தை எடுத்துக்கொள்வதும், பங்குச்சந்தை சரியும்போது பீதி அடைந்து பணத்தை வெளியே எடுத்துக் கொள்வதுமே.
NPS இந்த தவறுகளை தனது கட்டமைப்பின் மூலம் சரிசெய்கிறது:
- ‘Lock-in’ காலத்தில் முன்கூட்டியே பணத்தைத் திரும்பப் பெற முடியாமையால், ஒருவரது முதலீடுகளைக் காக்கிறது.
- தானியங்கி முதலீடு சீரான பங்களிப்பை உறுதி செய்கிறது.
- பங்குச்சந்தை, தனியார் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் எனப் பரவலான முதலீடுகள் மூலம் சந்தை அபாயங்களை சமன் செய்கிறது.
# # # முடிவாக
NPS ஒரு பரிபூரணமான திட்டமா? நிச்சயமாக இல்லை.
அது மட்டுமே உங்களின் ஒரே ஓய்வூதிய முதலீடாக இருக்கலாமா? அவசியமில்லை.
ஆனால், தலை சிறந்த முதலீட்டு வருமானத்தை அளிப்பதில்லை எனக் கூறி, அதை முழுவதும் நிராகரிப்பது, ஆழ்ந்த ஒரு நல்ல ஆலோசனை போலத் தோன்றினாலும், பல நேரங்களில் மோசமான முடிவுகளையே தருகிறது. அடுத்த முறை NPS போன்ற எளிய சேமிப்புத் திட்டத்தைக் குறை சொல்லும் ஒரு பதிவைக் கண்டால், நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி, இது உண்மையில் எனது செல்வத்தைப் பெருக்க உதவுகிறதா?, அல்லது சமூக ஊடக ஈர்ப்புக்காக மட்டும் உதவுகிறதா? என்று. இந்த வேறுபாட்டை உணர்வதுதான், எல்லாவிதமான கணக்குகளையும் விட மிக முக்கியமானது.