07/02/2023
ஆயுள் காப்பீடு பற்றிய TF Rinnozah அவர்களின் ஒரு அருமையான பதிவு முடிந்த வரை சற்று நேரம் ஒதுக்கி படித்து பகிரவும் எல்லாருக்குமே கட்டாயம் உபயோகமா இருக்கும் 🧡
முதலில் ஒரு சிறிய உண்மைச் சம்பவத்தை சொல்கிறேன். சென்ற வாரம் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின், சகோதரியின் கணவர் திடீரென்று மாரடைப்பால் இறந்து போனார். அவர் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். மூன்று குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு மனைவி ஊரில் இருந்திருக்கிறார். கணவனின் திடீர் மரணம் அவரை உள ரீதியாக மட்டுமல்ல, நிதி ரீதியாகவும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஏனென்றால் அவரின் வருமானத்தை நம்பி வீடு கட்ட ஆரம்பித்திருந்தார். வங்கிக் கடன்கள் வேறு. குடும்பத்திலும் பெரிதாக உதவ யாருமில்லை. பள்ளிப் படிப்பு மட்டுமே படித்திருக்கும், வாழ்க்கையில் இதுவரை வேலைக்கே செல்லாத அந்தப் பெண் மூன்று குழந்தைகளோடு எப்படி இத்தனை பாரத்தை சுமக்கப்போகிறார்?
இதைப் பற்றி இதற்கு மேல் இன்னும் விரிவாக எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்களுக்கே நிலமையின் விபரீதம் புரிந்திருக்கும். இப்போது ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், பல நண்பர்கள் என்னிடம் முதலீடு பற்றிய ஆலோசனையையும், அறிவுரைகளையும் அடிக்கடி கேட்பார்கள். முதலீட்டு ஆலோசனை என்பது நபருக்கு நபர் வேறுபடும். It’s a personalied product எனவே அது தொடர்பாக பொத்தாம் பொதுவாக இதை பண்ணுங்கள், இதைப் பண்ண வேண்டாம் என சொல்லிவிட முடியாது. உங்கள் பிரதேசத்தில் உள்ள வங்கியில், ஒரு தகுதி பெற்ற (Qualified) முதலீட்டு ஆலோசகரிடம் சென்று அறிவுரை பெற்றுக்கொள்ளுங்கள் என்பேன். ஆனால் இவர்கள் அனைவருக்கும் தவறாமல் ஒரு விடயத்தை மட்டும் அறிவுறுத்தி அனுப்புவேன். அது தான் கண்டிப்பாக ஆயுள் காப்பீடு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள் என்பது.
ஏனென்றால் உங்கள் இறப்புக்கு பிறகு, உங்களைச் சார்ந்தவர்கள் வாழ்க்கை மிக்கப்பெரிய அளவில் ஆட்டம் காணும். அப்போது அவர்களுக்கு இந்த ஆயுள் காப்பீடு கண்டிப்பாக நிதி ரீதியாக கை கொடுக்கும்.
மரணத்தைப் பற்றி நினைக்கவே நாம் விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பாவிட்டாலும் அது கண்டிப்பாக வந்தே தீரும் என்பது தான் நிதர்சனம். எதிர்பார்க்காத நிகழ்வுகள் நம்முடைய வாழ்வை மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்கள் வாழ்வையும் எப்பொழுது வேண்டுமானாலும் தடம் புரளச் செய்து விடலாம். எனவே எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்த்து, அதை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும். அத்தகைய புத்திசாலித்தனமான ஒரு முயற்சியே காப்பீடு.
டைட்டானிக் கப்பல் கட்டப்படும் போது அதன் நிர்வாகத்தை அணுகிய life boats விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் சேல்ஸ்மேனிடம் "கடவுளால் கூட மூழ்கடிக்க முடியாத கப்பலுக்கு லைஃப் போட்டா”? என ஏளனமாகப் பேசி திருப்பி அனுப்பினார்கள். ஆனால் ஒரு கப்பலில் இவ்வளவு சதவீதம் லைஃப் போட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தால் 1500 உயிர்கள் தப்பியது. ஆயுள் காப்பீடும் இது போலத்தான். Better safe than sorry!
இங்கே பலருக்கும் ஆயுள் காப்பீடு பற்றிய போதிய விளக்கம் இல்லை என்பதாலேயே அதை அப்படியே டீலில் விட்டு விடுகிறார்கள். அதேபோல, முதலீட்டில் காட்டும் ஆர்வத்தை மக்கள் காப்பீட்டில் காட்டுவதில்லை. காரணம், இதில் நான் கட்டும் காசு திரும்ப கிடைக்காதே என்ற எண்ணம். ஆனால், நீங்கள் கட்டும் பணம் முதிர்வின் போது உங்களுக்கு கிடைக்கும் வகை காப்பீடுகள் கூட இப்போது வந்துவிட்டன.
Sum assured பாலிசி மூலம் ஆயுள் காப்பீட்டின் முதிர்வுத்தொகை பாலிசிதாரருக்கு வழங்கப்படும். ஒருவேளை Maturity-க்கு முன்பே பாலிசிதாரர் மரணமடைந்தால், அவரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு (Nominee) காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே நீங்கள் இது போன்ற ஒரு பாலிசியை உங்கள் காப்பீடு ஏஜெண்டிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
பெரும்பாலான குடும்பங்களில் ஆயுள் காப்பீடு எடுக்காததன் இன்னொரு காரணம் அதற்கான பிரிமியம் கட்டும் அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை. குறிப்பாக middle class மாத வருமானம் பெரும் குடும்பங்களில், கிடைக்கும் சம்பளம் அன்றாட செலவுக்கே சரியாகி விடும். இங்கு சேமிப்பே இல்லை எனும்போது காப்பீட்டுக்கு எங்கே போவது என்பதும் பலரது பொதுவான புலம்பல்.
இப்போது பல காப்பீட்டு நிறுவன பாலிசிக்களில் முதல் 5-10 வருடங்கள் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். அதன் பிறகு உங்கள் பணத்தை அவர்கள் வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்வார்கள். மெச்சூரிட்டியின் போது sum assured செய்யப்பட்ட முதிர்வு தொகையைப் பாலிசிதாரருக்கு வழங்குவார்கள். அதற்கு முன் ஒருவேளை இறப்பு நிகழும் பட்சத்தில் காப்பீட்டுத் தொகை மொத்தமாக குடும்பத்துக்கு வழங்கப்படும். இந்தத் தொகைக்கு ஒரு பைசா வரி செலுத்தத் தேவையில்லை. உங்கள் வருமானத்துக்கு ஏற்ப தொகையையும், பிரீமியத்தையும் நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்பதால், உங்களால் முடிந்த குறைந்தபட்ச ஒரு சிறு தொகையையாவது ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்யுங்கள்.
40 வயதுக்கு மேல் பல வியாதிகள் மெல்ல மெல்ல நம் உடலை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும், எனவே ஆரோக்கியமான உடல்நலம் உள்ளபோதே இன்சூரன்ஸ் செய்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை பெரிய அளவில் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பலவிதமான பாலிசிக்களை வழங்குகின்றன. எனவே shop around செய்து உங்களுக்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்யலாம். மார்க்கெட்டில் இருக்கும் காப்புறுதி நிறுவனங்களின் பாலிசிக்களை எல்லாம் மொத்தமாக ஆராய்ந்து, அதில் உங்கள் தேவைக்கு பொருத்தமான ஒன்றை தேடித்தரும் ஏஜெண்டு நிறுவனங்களும் பல வந்துவிட்டன. ஆனால் எந்த பாலிசியை எடுத்தாலும், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தெளிவாகப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு சிறு சந்தேகம் என்றாலும் உங்கள் ஏஜெண்டிடம் விளக்கம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்வது மிக மிக முக்கியம்.
ஆயுள் காப்பீடு உயிர் காக்கும் மருந்து அல்ல. அந்த உயிர் போய் விட்டால், அவரைச் சார்ந்து இருப்பவர் தொடர்ந்து உயிர் வாழக் கிடைக்கும் ஒரு ஊன்று கோல் அது. இதுவரை உங்கள் ஆயுளை காப்பீடு செய்திருக்கவில்லை என்றால், இதைப் படித்தபிறகு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஆயுள் காப்பீடு ஆடம்பரமல்ல, அத்தியாவசியம் !