16/01/2026
நன்றி!!!
திரு. துகளக் சத்யா
துணிவோடும் தெளிவாகவும் பேசும் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவராக இருப்பவர் தமிழக பாஜக பொதுச்செயலாளர் திரு இராம ஸ்ரீனிவாசன். இந்த ஆண்டு துக்ளக் விழாவில் பேசவும் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அரசின் பிடியிலிருந்து அறநிலையத்துறை மீட்கப்படும் என்பது பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதியாக இருக்கும் என்று அவர் பேசியுள்ளார். அண்ணாமலையும் இதே கருத்தை பல முறை கூறியுள்ளார்.
அறநிலையத்துறை என்பது சம்பாதிக்க வசதியாக இருக்கும் துறைகளில் ஒன்று என்பதால், ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகள் அத்துறையை விட்டுத்தர முன் வருவதில்லை. .
அறநிலையத் துறை ஒரு புனிதமான துறையாகக் கருதப்பட வேண்டும். திராவிடக் கட்சிகளால் அப்படி கருத முடியாது. அதிலும் கடவுள் பக்தியே இல்லாத ஒரு கட்சியின் கட்டுபாட்டில் அறநிலையத்துறை இருந்தால் அத்துறை அதிகபட்ச சீரழிவையே சந்திக்கும். அதனால் அறநிலையத் துறை மற்ற மாநிலங்களில் உள்ளது போல, நம்பகமான தனியார் வசம் செல்வதே நல்லது.
ஆனால், அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும் இது நிறைவேறுமா என்பது சந்தேகம். அதே சமயம் பாஜக தொடர்ந்து அதிமுகவை வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
அறநிலையத்துறை அரசிடம் ஏன் இருக்கக்கூடாது என்பதற்கு சரியான உதாரணம் திருப்பரங்குன்றம்.
தமது உத்தரவுகளை அரசு நிறைவேற்ற மறுப்பது குறித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுடைய வருத்தம் அவரது வார்த்தைகளிலிருந்து புரிகிறது.
அங்கு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் பிறையுடன் கூடிய சந்தனக் கூடு கொடியை யாரையும் கேட்காமல் தர்கா நிர்வாகம் ஏற்றியுள்ளது. அவ்வளவு நம்பிக்கை. இதை கோயில் நிர்வாகம் தடுக்கவில்லை. இதை நீதிபதி சுட்டிக்காட்டி, போலீசுக்கு புகார் அளிக்க வலியுறுத்திய பிறகே, கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
இவ்வளவுதான் ஹிந்து நம்பிக்கைகளைக் காப்பதில் அரசுக்கு உள்ள அக்கறை.
அறநிலையத்துறை, அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவ மனைகள் இம்மூன்றும் ஊழலற்றவர்களால் நிர்வகிக்கப்பட்டால் மட்டுமே நல்ல மாற்றத்தை உணர முடியும்.
2026 க்குப் பிறகு, இராம ஸ்ரீனிவாசன், அண்ணாமலை போல மற்ற பாஜக தலைவர்களும் இதில் தீவிர முயற்சியை மேற்கொண்டால் இந்தக் கனவு நிறைவேறும்.
_ துக்ளக் சத்யா