16/04/2026
நீங்கள் கோடி ரூபாய் சேர்க்க இந்த 5 விஷயங்கள் போதும்... வாரன் பஃபெட் சொல்லும் முதலீட்டு அறிவுரைகள்!
பல லட்சம் கோடிகளைச் சம்பாதித்த, அதேநேரம் எளிமையான வாழ்க்கை முறையால் உலகம் முழுவதும் மதிப்பு பெற்ற முதலீட்டாளர், வாரன் பஃபெட் (Warren Buffett). அவர் கூறும் முதலீட்டு ஆலோசனைகள் எளிமையாகத் தோன்றி னாலும், அவற்றில் ஆழமான நிதி அறிவு இருக்கும். அவரது கருத்துகளை அடிப்படை யாகக்கொண்டு, நாம் வாழ்க்கையில் பணத்தைச் சரியாக நிர்வகித்துவந்தால், நம்மாலும் சேர்க்க முடியும் கோடிகள்.
வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு சுமார் 140 பில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.12,88,000 கோடி. அவர் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்க நீங்கள் ரெடியா?!
1. பல வருமான மூலங்கள் அவசியம்!
ஒரே ஒரு சம்பளத்தை மட்டும் நம்பி வாழ்வது இன்றைய காலத்தில் பாதுகாப்பானது அல்ல. வேலை இழப்பு, உடல்நலப் பிரச்னைகள் போன்ற காரணங்களால் வருமானம் தடைப்படலாம். அதனால், முதலீடு மூலம் கூடுதல் வருமானம் உருவாக்க வேண்டும். உதாரணமாக, நிலம், வீடு, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்தால், அவை நமக்குத் தொடர்ந்து வருமானத்தை உருவாக்கும். இது நிதிப் பாதுகாப்பை அதிகரிக்கும்.
2. முதலீட்டைப் பரவலாகச் செய்யுங்கள்!
ஒரே இடத்தில் எல்லா பணத்தையும் முதலீடு செய்வது மிகப்பெரிய ரிஸ்க். ஒரு துறையில் இழப்பு ஏற்பட்டால், முழு முதலீடும் பாதிக்கப்படும். அதனால், பங்குச் சந்தை, நிலம், தங்கம், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பணத்தைப் பகிர்ந்து முதலீடு செய்வது நல்லது. இதையே `பரவலாக்கம்’ என்று கூறுகிறோம். இது ரிஸ்க்கை வெகுவாகக் குறைக்கும்.
3. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துவிடுங்கள்!
நாம் தேவையில்லாத பொருள்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினால், அது நிதிச் சிக்கலை உருவாக்கும். இன்று தேவையில்லாத பொருள்க ளுக்குச் செலவுசெய்தால், நாளை அவசியமான பொருள்களை விற்க வேண்டிய நிலை வரலாம். எளிமையான வாழ்க்கைமுறை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செலவுதான் நீண்டகாலத்தில் செல்வத்தை உருவாக்கும்.
4. சேமிப்புப் பழக்கம் மிக முக்கியம்!
ஒவ்வொரு மாத வருமானத்திலும் குறைந்தது 10% தொகையைச் சேமிக்க வேண்டும். இந்தச் சேமிப்பு அவசர காலங்களில் மிகவும் உதவும். அதேபோல, அவசரகால நிதி (Emergency Fund) உருவாக்குவது மிக முக்கியம். குறைந்தது 6 மாதச் செலவுக்கு சமமான தொகையை தனியாக வைத்திருப்பது பாதுகாப்பானது.
5. அறிவில்லாமல் முதலீடு செய்வது அபாயம்!
“Risk comes from not knowing what you’re doing” என்ற வாரன் பஃபெட்டின் கருத்து மிகவும் முக்கியமானது. நாம் நமக்குப் புரியாத முதலீட்டில் பணம் செலுத்தினால், அது சூதாட்டம் போன்றதாக மாறும். அதனால், முதலீடு செய்வதற்கு முன்பு அந்தத் துறையைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
வாரன் பஃபெட் சொல்லும் பின்வரும் டிப்ஸையும் எடுத்துக்கொள்ளுங்கள்...
நீண்டகால முதலீட்டு நோக்கம் அவசியம்!
முதலீட்டைக் குறுகியகால லாபத்துக்காக அல்லாமல், நீண்டகால வளர்ச்சிக்காகச் செய்ய வேண்டும். பொறுமைதான் செல்வத்தை உருவாக்கும் முக்கிய குணம்.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்!
பங்குச் சந்தை உயர்ந்தால் மகிழ்ச்சி, விழுந்தால் பயம் என்று இருந்தால் இவை முதலீட்டை பாதிக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும்.
கடன் கட்டுப்பாடு!
அதிக கடன் வாங்குவது நிதிச் சுதந்திரத்தைக் குறைக்கும். முதலில் கடனைக் கட்டுப்படுத்தி, பிறகு முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
செல்வந்தராக மாறுவது ஒரே நாளில் நடக்காது. ஆனால், முறையான சேமிப்பு, திட்டமிட்ட முதலீடு, பொறுமை, அறிவு இவை நான்கும் இணைந்தால், நிச்சயம் நல்ல நிதி வளர்ச்சி ஏற்படும்.
உலகக் கோடீஸ்வரர் வாரன் பஃபெட் கூறும் இந்த எளிய ஆலோசனைகளை நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால், நிதிச் சுதந்திரத்தை அடையலாம். கோடிகளைச் சேர்க்கலாம்!